search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் மீது தாக்குதல்"

    பெரம்பலூர் அருகே விநாயகர் சிலையை எடுத்து சென்ற போலீசார் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் 3 பிரிவினருக்கு இடையே பாதை பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள யாரும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது என பாடாலூர் போலீசார் தெரிவித்திருந்தனர். இருப்பினும் ஒரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் போலீசாரின் தடையை மீறி, அனுமதி இல்லாமல் விநாயகர் சிலையை வைக்க கடந்த 13-ந்தேதி கொண்டு வந்தனர். அப்போது விநாயகர் சிலையை வைக்கக்கூடாது என்று போலீசார் தடுத்தனர். அதையும் மீறி பாடாலூரில் சிலையை வைத்தனர்.

    இதையடுத்து பாடாலூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர், விநாயகர் சிலையை வைத்த பொதுமக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிரச்சினைக்குரிய பாதையில் கொண்டு செல்லாமல், மாற்று வழியில் விநாயகர் சிலையை எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்துவிட்டு சென்றனர்.

    இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, வழக்கமான பாதையில் விநாயகர் சிலையை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி மனு அளித்தனர். அப்போது அவர்களிடம், போலீசார் அனுமதிக்கும் வழித்தடத்தில் செல்லுமாறு கோட்டாட்சியர் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, பெரம்பலூர் சங்குபேட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, அன்று இரவு விடுவித்தனர்.

    இந்தநிலையில் நேற்று பிரச்சினைக்குரிய விநாயகர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ரெங்கராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் விநாயகர் சிலையை எடுத்துச் செல்லுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் எடுத்துச்செல்ல மாட்டோம். வழக்கமான பாதையில் தான் எடுத்துச் செல்வோம் என்று பொதுமக்கள் கூறினர். இதனால் 3 பிரிவினருக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் என்று கருதிய போலீசார், தாங்களே அங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றி சென்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊட்டத்தூர் சாலையின் குறுக்கே கட்டைகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பொதுமக்கள் போலீசாரை நோக்கி கற்களையும் வீசினர். இதில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. மேலும், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் பெண் போலீசார் தங்க பானு, சூர்யா உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

    கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தியதால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பாடாலூர் பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    ஓட்டலில் ‘ஆம்லெட்’ கேட்ட விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தாக்கப்பட்டார்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் மாரியப்பன் (வயது 30). இவர் காடுபட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று மாரியப்பன், கூடக்கோவில் அருகே உள்ள கல்லனை பகுதி ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார். அங்கு அவரது ஊர்க்காரர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும், கடை உரிமையாளர் நெடுங்குளம் பாலனுக்கும் ‘ஆம்லெட்’ தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த சம்பவத்தில் மாரியப்பன் தலையிட்டு, ஓட்டல் உரிமையாளர் பாலனை தாக்கினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த பாலன், அவரது உறவினரான தொழில் அதிபர் முருகன் (43), அவரது மகன்கள் பெருமாள் (24), சதீஷ் (22) ஆகியோர் சேர்ந்து போலீஸ்காரர் மாரியப்பனை கம்பியால் தாக்கினர்.

    இதில் தலை மற்றும் கால் மூட்டில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி முருகன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் பெருமாள் மற்றும் சதீஷ் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    காவிரி பிரச்சினை தொடர்பாக நடந்த போராட்டத்தில் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சி பிரமுகரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமி‌ஷனர் உத்தரவிட்டார். #cauveryissues
    சென்னை:

    காவிரி பிரச்சினை தொடர்பாக கடந்த ஏப்ரல் 10-ந்தேதி சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

    சென்னை அண்ணா சாலையில் நடந்த மறியல் போராட்டத்தின் போது சேப்பாக்கம் நோக்கி தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றனர். நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீஸ்காரர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டார். போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசை தாக்கிய வாலிபர் யார்? என்பது முதலில் தெரியாமல் இருந்தது. இதனை தொடர்ந்து வீடியோ காட்சியை வைத்து அந்த நபர் யார்? என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    எண்ணூர் திலகர் நகர் பகுதியை சேர்ந்த மதன்குமார் (23) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். நாம் தமிழர் கட்சி பிரமுகரான இவர் கடந்த மாதம் 31-ந்தேதி போலீசில் சிக்கினார். புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

    மதன்குமார் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், மதன்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    ஐ.பி.எல். போராட்டத்தில் நடந்த மோதல் தொடர்பாக இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம் தலைமையிலான போலீசார் மேலும் பலரை தேடி வருகிறார்கள். #cauveryissues
    ×